Published : 27 Mar 2025 12:28 PM
Last Updated : 27 Mar 2025 12:28 PM
குன்னூர்: குன்னூர் மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், 15 கடைகள் எரிந்து, பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.நேற்று இரவு 10 மணி அளவில் மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மள, மளவென காட்டு தீ போல் அருகே உள்ள கடைகளுக்கும் பரவியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அங்கும்,இங்கும் தலைத் தெறிக்க ஓடினர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் தீ பற்றி எரிந்தது. இதனால் நகரப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீரை எடுத்து வர இயலாததால் தீயணைப்பு துறையினர் திண்டாடினர். பின்னர் உதகை, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.
இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையால் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களால் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.என்.நிஷா, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டிஎஸ்பி ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர் உசேன்,சையது மன்சூர் ஆகியோர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இந்த திடீர் தீ விபத்தில் துணி, பெயிண்ட், மளிகை கடைகள் என கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் தீக்கிரையானது. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மவுண்ட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், வியாபாரிகளும் அதிகளவில் குன்னூர் சப் டிவிஷன் மற்றும் உதகையில் இருந்து நூற்றுக்கணக்கான போலீஸார் வரவழைக்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவை பகலாக்கும் வகையில் கொழுந்து விட்டு எரிந்த இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்து குறித்து காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வரை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் புகை மூட்டம் அதிகரித்து வருவதால் தீயணைப்பு துறையினர் அதனை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இதன் காரணமாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment