Published : 27 Mar 2025 06:02 AM
Last Updated : 27 Mar 2025 06:02 AM
பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஏப். 6-ம் தேதி ராமநவமியன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் நடக்கும் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் 2019 மார்ச் 1-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.535 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகளை கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வுசெய்து, சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, அவர் சுட்டிக்காட்டிய பணிகள் சரி செய்யப்பட்டன.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏப்.6-ம் தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. மேலும், அன்று ராமேசுவரத்திலிருந்து புதிய ரயில் சேவையைத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே விழாவுக்கான மேடை அமைக்கப்படும்.
ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். மேலும், பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினை இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ரயில் பாதைக்கான நிலங்களைக் கையப்படுத்த வேண்டும். இதனால், தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தாமதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT