Published : 27 Mar 2025 05:59 AM
Last Updated : 27 Mar 2025 05:59 AM

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி: அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு குறித்து இபிஎஸ் தகவல்

‘தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம், போதைப் பொருள் நடமாட்டம், டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்துதான் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினோம். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, கூட்டணி முடிவு செய்யப்படும்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படக்கூடும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி நேற்று கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை அவரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். நூறு நாள் வேலை, எஸ்எஸ்ஏ கல்வி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து தாமதமாகும் நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினோம். இது மட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தோம்.

தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடக அரசு கூறி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக்கில் நடந்துள்ள முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு இருக்கிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தொகுதி மறுவரையறையை மேற்கொள்வது, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது, மத்திய அரசு உரிய நிதியை விடுவித்து நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றுவது, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்குவது ஆகியவற்றையும் அதில் வலியுறுத்தி உள்ளோம்.

டெல்லியில் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை ஏற்கெனவே காணொலி மூலம் திறந்து வைத்தேன். அதை நேரில் பார்வையிட்ட பிறகு, நேரம், வாய்ப்பு இருந்தால் பார்க்கலாம் என்று இருந்தோம். வாய்ப்பு கிடைத்ததால், சந்தித்தோம். நான் தனியாக சந்திக்கவில்லை. எம்.பி.க்கள், மூத்த தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விளக்கமாக சுமார் 45 நிமிடம் பேசினோம். அமைச்சரும் விவரமாக கேட்டறிந்தார். தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறதா. அதெல்லாம் கிடையாது. தவிர, சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அதுபற்றி முடிவு செய்யப்படும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

டெல்லியில் இருந்து திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘2026-ல் தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி அரசு அமையும் என்று வலைதளத்தில் அமித் ஷா பதிவிட்டது அவரது விருப்பம். தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு, ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி கூட்டணி முடிவு செய்யப்படும். திமுகவை வீழ்த்துவது ஒன்றே எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் நிலைப்பாடு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்’’ என்றார்.

டெல்லியில் அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு, கூட்டணி வாய்ப்பு குறித்து, சட்டப்பேரவைக்கு நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எல்லாம் நன்மைக்கே’’ என்றார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனிடம் கேட்டதற்கு, ‘‘டெல்லியில் அமித் ஷா - பழனிசாமி இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது, இது கூட்டணி தொடர்பான சந்திப்பா என்பது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து பாஜக தேசிய தலைமை தகுந்த நேரத்தில் அறிவிக்கும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x