Published : 27 Mar 2025 01:03 AM
Last Updated : 27 Mar 2025 01:03 AM

டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்: தென்னிந்தியா முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கோப்புப் படம்

புதிய டெண்டர் விதிமுறைகளை நீக்கக் கோரி, எரிவாயு (காஸ்) டேங்கர் லாரிகள் இன்று (27-ம் தேதி) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தென்மண்டல எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக 5,514 எல்பிஜி புல்லட் டேங்கர் லாரிகள் உள்ளன. இவை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை, சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு லோடு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கான வாடகை ஒப்பந்தம், ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைய உள்ளது. புதிய ஒப்பந்தத்துக்கு மார்ச் 1 முதல் ஏப். 15 வரை விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், 2,036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். தற்போது அறிவித்துள்ள ஒப்பந்தத்தில் 21 டன் எடையுள்ள எரிவாயு ஏற்றும் 3 ஆக்ஸில் லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், தற்போது பயன்பாட்டில் உள்ள லாரிகளில், 80 சதவீத லாரிகள், 18 டன் எரிவாயு ஏற்றிச்செல்லும் 2 ஆக்ஸில் லாரிகளாகும். புதிய ஒப்பந்த அறிவிப்பால், 3 ஆக்ஸில் லாரிகளை வைத்திருப்போருக்கே ஒப்பந்தம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 ஆக்ஸில் லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; வாடகை நிர்ணயம் செய்வதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்த கோரிக்கைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்பும், அவை பரிசீலிக்கப்படவில்லை. இதனால், இன்று (27-ம் தேதி) காலை 6 மணி முதல், தென்னிந்தியா முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிவாயு லோடு ஏற்றவோ, ஏற்கெனவே ஏற்றியுள்ள எரிவாயு லோடை இறக்கவோ எரிவாயு டேங்கர் லாரிகளை இயக்க மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எரிவாயு டேங்கர் உரிமையாளர்களின் ஸ்டிரைக் போராட்டம் நீடித்தால் தென்னிந்தியா முழுவதும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x