Published : 26 Mar 2025 11:04 PM
Last Updated : 26 Mar 2025 11:04 PM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக, பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 24-ம் தேதி இரவு பணி முடிந்து பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், அந்த வளாகத்தில் உள்ள விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இளைஞர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்கினார். அந்தசமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பணியாளர் ஒருவரின் கணவர் வந்ததை அடுத்து, அவர் தப்பியோடினார். இதுகுறித்து கல்லூரி டீன் சத்தியபாமா அளித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதுதொடர்பாக டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையிலான தனிப்படையினர் சிவகங்கை ஆவரங்காட்டைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், ‘மார்ச் 24-ம் தேதி இரவு சந்தோஷ் தனது தாயாரிடம் சண்டையிட்டு கொண்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் தங்குமிடத்தில் தூங்குவதற்காக வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர், தனியாக நடந்து சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறியது நடந்தது தெரியவந்தது.
இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக இன்றும், பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இன்று சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இருந்து வந்த துணை இயக்குநர்கள் ஜெயராஜ், சாந்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
அக்குழுவினரிடம், ‘இரவில் தங்க அறை இல்லை. விடுதிக்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் இல்லை. சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை’ என்று பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அவசர சிகிச்சை மற்றும் தலைக்காய பிரிவில் பூட்டிக்கிடந்த ஓய்வறையை பார்த்து இயக்குநரக குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மருத்துவ நிர்வாகத்திடம் சாவியை பெற்று அறையை உடனடியாக திறந்துவிட்டனர். நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி அலுவலர்கள் ரபீக், தென்றல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...