Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM

ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: தி இந்து உங்கள் குரல் மூலம் ஒரு கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இது பற்றி >உங்கள் குரல் பகுதிக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் பேசியதில் அவர்கள் கூறியதாவது:

கண்ணம்மா, பாலகிருஷ்ணன் உடுமலை:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வின் மூலம் தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர்காணல் அழைப்பும் வந்தது. அதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண் அளித்தனர் தேர்வாளர்கள். இதை கவனித்து எங்களைப் போன்ற சீனியர்கள் அதிர்ச்சியடைந்தோம்.

டிஇடி தேர்வு என்பதில், வெறுமனே பெறும் மதிப்பெண்ணை கணக்கிட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதற்கு தனி மதிப்பெண்ணை அளிப்பதாக இருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இப்படி கணக்கிடுவது எந்த வகையில் நியாயம்? பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ளது போன்ற கல்வியும் இல்லை. மதிப்பெண் போடுவதும் இல்லை.

உதாரணமாக நான் (கண்ணம்மா) 90-92 ஆம் ஆண்டுகளில் பிஎட் படிக்கும் காலத்திலும், அதற்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதும் ஒரு பாடத்தில் 80 மதிப்பெண் ஆசிரியர்கள் போடுவது என்பது குதிரைக் கொம்பு. அதே மதிப்பெண்ணை இப்போதுள்ள சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களே வாங்குவதும், நூற்றுக்கு நூறு, தொண்ணூறு மதிப்பெண்கள் ஏராளமான மாணவர்கள் பெறுவதும் சாதாரணமாக உள்ளது. அந்த வகையில் பள்ளி மதிப்பெண்ணை கணக்கிட்டால் எங்களை போன்ற சீனியர் ஆசிரியர்கள் யாருக்குமே பணி வாய்ப்பு கிடைக்காது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாங்கள் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நான்கு, ஐந்து தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக மாறி மாறி பணிபுரிந்து வெறும் ஆயிரம், ஐயாயிரம் சம்பளத்துக்கு கஷ்டப்பட்டுள்ளோம். அந்த அனுபவத்தையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. சீனியர்களுக்கு 50 சதவீதம் என்று ஒதுக்கீடு செய்யலாம் அல்லவா? மேல்மட்டத்தில் பரீசிலனை செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு உங்கள் குரல் மூலம் தீர்வு வேண்டும் என்றனர்.

பெயர் வெளியிடவிரும்பாத மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர் கூறியது:

கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளிகளுக்காக டிஇடி சிறப்பு தகுதித் தேர்வு வச்சாங்க. அதில் தமிழ்நாடு முழுக்க 4500 பேர் எழுதியிருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு ரிசல்ட் வந்தது. சுமார் 900 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாங்க. தேர்வு எழுதுவதற்கு முன்பு 82 சதவீத மதிப்பெண் எடுத்தாலே அவர்களுக்கு வேலை என்று சொன்னார்கள். ஆனால் கடந்த ஜீலை 1,2 தேதிகளில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் எங்களுக்கு நேர்காணல் வைத்தார்கள். அதில் 10 வது, 12 வது படித்தபோது எடுத்த மதிப்பெண்களை வைத்து ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் போட்டுள்ளார்கள். இப்ப யாருக்கு வேலை என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

போன வருஷம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டார்கள். அதில் மாற்றுத்திறானளிகள் உள்பட 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கே இதுவரை பணியிடம் நிரப்பவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடம் ஒதுக்கீடு என்கிறார்கள். தற்போது 10 ஆயிரம் பணியிடம் நிரப்பப் போவதாக தகவல்கள் உள்ளது. அப்படி பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதத்திற்கு 300 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த வாய்ப்பு இந்த முறை அல்லாமல் சென்ற முறை எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் முதல் இடமா? சீனியாரிட்டிபடி வருமா? ஒன்றுமே புரியவில்லை. கல்வித்துறை இதை தெளிவு படுத்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x