Published : 26 Mar 2025 06:07 PM
Last Updated : 26 Mar 2025 06:07 PM

“கூட்டிக் கழித்துப் பார்த்தால் இபிஎஸ் கணக்கு சரியாக இருக்கும்” - அமைச்சருக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

சென்னை: “கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள், இப்போது தப்பு கணக்கு போடுகிறார்கள்” என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அதற்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “எம்ஜிஆர், ஜெயலலிதா போல் பழனிசாமி போட்ட கணக்கும் கூட்டி கழித்து பார்த்தால் சரியாக இருக்கும்” என்று அமைச்சருக்கு பதிலளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 26) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடக்கி வைத்து அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “நிதிநிலை அறிக்கையே கணக்குப் பற்றியதுதான். அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால், கணக்கு கேட்டதால் தொடங்கப்பட்டது. நாங்கள் 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் எங்கள் கணக்கை தொடங்குவோம்” என்றார்.

அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “கணக்கைக் கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள், இப்போது தப்பு கணக்கு போடுகிறார்கள்” என்றார்.

அதற்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “நிதியமைச்சர் அமைச்சர் கணக்கு குறித்து கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் சரி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சரி, எப்போதுமே அவர்கள் போட்ட கணக்கு சரியாக இருக்கும். அந்த கணக்கை கூட்டிக் கழித்து பார்த்தால் கடைசியில் சரியாகத்தான் வரும்” என்றார்.

முன்னதாக, நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதுதொடர்பாக முதலவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். இந்நிலையில், அதிமுக-பாஜக பேச்சுவார்த்தைக் குறித்து இன்றும் சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x