Last Updated : 26 Mar, 2025 04:29 PM

1  

Published : 26 Mar 2025 04:29 PM
Last Updated : 26 Mar 2025 04:29 PM

நெல்லை மாநகராட்சி பட்ஜெட்: தாமிரபரணி மாசுபடுவதை தடுக்க ரூ.55.72 கோடியில் திட்டம்

படங்கள்: மு.லட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் ரூ.55.72 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாநகராட்சியின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

ந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு மற்றும் புதிய திட்டப்பணிகள் விவரம்: > திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை கட்டுப்படுத்தும் பணிகளை, அரசு மானியமாக வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.55.72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.

>கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

>மாநகராட்சி கட்டிடங்களில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் சீரமைக்கவும், புதிதாக 4 மெகாவாட் சோலார் அமைப்புகளை ஏற்படுத்தவும் ரூ.15 கோடியில் சிறப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.

>மாநகராட்சி பூங்காக்களில் ரூ.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள், மாநகரில் 40 இடங்களில் ரூ.8 கோடியில் நவீன வசதிகளுடன் பேருந்து நிறுத்தங்கள், மாநகராட்சி பள்ளிகளில் ரூ.2.4 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

>100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 3 லட்சம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.

>மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சதுரங்கம், பேட்மிட்டன், ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி பயன்பாட்டில் உள்ள பூங்காக்களை பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் நோக்கில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

>திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் ரூ.1.5 கோடியில் பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்படும்.

> திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் விடுவதற்காக ரூ.60 லட்சம் செலவில் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

>மாநகரில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் விதமாக சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணிக்காக நவீன வசதிகளுடன் கூடிய கருத்தடை சிகிச்சை மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

>மாநகராட்சிக்கு சொந்தமான காலி மனைகளை டிரோன் கேமராக்கள் மூலம் சர்வே செய்து அதன் எல்லையை நிர்ணயித்து கணினியில் பதிவேற்றம் செய்ய ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

>4 மண்டலங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வெளிப்புற பணியாளர்கள் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்திட வாக்கிடாக்கி ரூ.45 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

>மாநகராட்சியின் வரலாற்று சின்னமாக உள்ள மேடை காவல் நிலையம் மற்றும் ரெட்டியார்பட்டி நான்கு வழி சாலையில் அமைந்துள்ள மலைப் பகுதியின் உச்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ரூ.30 லட்சத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

>பொதுமக்கள் மாநகராட்சிக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரிகளை எளிதில் மாநகராட்சிக்கு செலுத்த ஏதுவாக நடமாடும் வரி வசூல் வாகனம் ரூ.25 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.

>மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்க ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலி, மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.

>ராமையன்பட்டி உரக்கிடங்கு வளாகத்தில் 58 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்காக ரூ.93.44 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

>திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளால் சேதம் அடைந்த 237 கி.மீ. தூரத்திற்கு சாலைகளை சீரமைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

>திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை மற்றும் தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து கொட்டகைகள் அமைத்து பராமரிக்க 4 மண்டலங்களிலும் கால்நடை கொட்டகை அமைக்க ரூ.1.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

>ரூ.15 கோடியில் திருநெல்வேலி மண்டல அலுவலக கட்டிடம் மற்றும் மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

>திருநெல்வேலி மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் ரூ.5 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பேட்டையில் புதிய பேருந்து நிலையம்: மாநகராட்சியின் தலைமை நீரேற்று நிலையங்களில் இருந்து வரும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்கும் பணிக்காக ரூ. 33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய பேட்டை பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் ரூ.2.77 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் 2025-2026-ம் நிதியாண்டுக்கான ரூ.2.77 கோடி உபரி பட்ஜெட்டை மேயர் கோ. ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

அதன்படி 2025-2026-ம் நிதியாண்டில் மாநகராட்சியில் வருவாய் நிதி ரூ.266.98 கோடி, குடிநீர் வடிகால் நிதி ரூ.106.88 கோடி, ஆரம்ப கல்வி நிதி ரூ.29.84 கோடி என்று மொத்தம் ரூ.403.70 கோடி வருவாயாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வருவாய் நிதி ரூ.281.78 கோடி, குடிநீர் வடிகால் நிதி ரூ.100.61 கோடி, ஆரம்ப கல்வி நிதி ரூ.18.54 கோடி என்று மொத்தம் ரூ.400.94 கோடி செலவினம் ஏற்படும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரூ.2.77 கோடி உபரியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 2024-2025-ம் நிதியாண்டில் ரூ.2.89 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பட்ஜெட் கூட்டத்தில் துணை மேயர் கே. ராஜு, ஆணையர் சுகபுத்ரா, மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீ. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x