Published : 26 Mar 2025 01:15 PM
Last Updated : 26 Mar 2025 01:15 PM
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் மகளிருக்கும் இரண்டு புதிய விடுதிகளை புதுச்சேரி அரசு துவங்கவுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசுகையில், “மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமன விதிகள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருத்தப்பட்டன. மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர் பதவியிலிருந்து மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 75:25 என்ற விகிதத்தில் 13 பேருக்கு முதன்முதலாக தரப்பட்டது. தற்போது மார்ச் மாதம் வரை 122 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக உள்ளன. நிர்வாக ஒப்புதல் பெற்ற பிறகு 25 சதவீத அடிப்படையில் 31 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்களுக்கு பதவி உயர்வு தரப்படும்.
மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் மகளிர் மற்றும் மாணவியர் தங்கும் விடுதிகள் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு சென்று படிக்கும் மாணவிகளுக்கும், பணிபுரியும் மகளிருக்கும் இரண்டு புதிய விடுதிகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விடுதிகள் மூலம் பெண்களுக்கும், மாணவியருக்கும் நல்ல பாதுகாப்பும் சுகாதார உணவும் தர இயலும். இதற்கான ஒரு விடுதியை முதலில் தொடங்க இடவாடகை, அட்வான்ஸ் மற்றும் சாதனங்களுக்கு முதலில் ரூ.20 லட்சம் என்ற கணக்கில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
வேளாண்துறையின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சிக்கன நீர்ப்பாசனம் செய்ய புதிய ஐஎஸ்ஐ தரமுள்ள பிவிசி நிலத்தடி நீர் பாசன குழாய்கள் அமைத்து அரசு மானியம் பெற கால இடைவெளி தற்போது நடைமுறையில் உள்ள 15 ஆண்டுகள் என்பது 7 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
மகளிர் மேம்பாட்டுத்துறை மூலம் ஐந்து வயது முதல் 18 வயது வரை இறக்கும் குழந்தைகளின் ஈமச்சடங்குக்கு ரூ.15 ஆயிரம் இந்த நிதியாண்டு முதல் தரப்படும்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment