Published : 26 Mar 2025 06:20 AM
Last Updated : 26 Mar 2025 06:20 AM

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான பொது ஏலத்தை அரசு அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே அறிவிக்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக வரும் ஏப்.25-ம் தேதிக்குள் தமிழக அரசு பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடாவிட்டால், நீதிமன்றமே ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சீினிவாசன், ‘‘சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 37 மாவட்டங்களில் 738 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 ஜனவரி வரை சீமைக் கருவேல மரங்களை அகற்ற ரூ. 2 கோடியே 37 லட்சத்து 71 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது’’ என்றார்.

அரசுக்கு வரு​வாய் கிடைக்​கும்: அப்போது சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசு பணத்தை செலவிடுவது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த பணிகளை தனியாருக்கு வழங்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே என கருத்து தெரிவித்தனர். மேலும், கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவுகள் இதுவரையிலும் அமல்படுத்தப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

தொடர்ந்து சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு பொது ஏலம் விடும்படி கடந்த 2022-ம் ஆண்டே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக பொது ஏலம் குறித்த அறிவிப்பை வரும் ஏப்.25-ம் தேதிக்குள் தமிழக அரசு வெளியிடாவிட்டால், நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட நேரிடும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்து விசாரணையை வரும் ஏப்.25-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x