Published : 26 Mar 2025 05:54 AM
Last Updated : 26 Mar 2025 05:54 AM
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய ராமநாதபுரம், விவசாயம் சார்ந்த வணிகம், அபரிதமான தொழில் வளர்ச்சியினை கொண்டுள்ள பெரம்பலூர் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளின் தரத்தை உயர்த்தும்போது, இவற்றின் எண்ணிக்கை சென்னை மாநகராட்சி உட்பட 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் இருக்கும்.
நகர்புற உள்ளாட்சிகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட பொறியியல், நகரமைப்பு மற்றும் சுகாதார பிரிவு பணியிடங்களில் 2,566 பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் நியமிக்கப்படுவர்.
தமிழகத்தில் ரூ.17,453 கோடியில் 25 கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளும், ரூ.767 கோடியில் 4 குடிநீர் திட்ட மறுசீரமைப்பு பணிகளும் நடைபெறுகின்றன. இதன்மூலம் இன்னும் கூடுதலாக 806 மில்லியன் லிட்டர் குடிநீர் 137 லட்சம் மக்களுக்கு கிடைக்கும். ஆக இவை நிறைவுறும்போது வரும் செப்டம்பர் முதல் மொத்தமாக 6.65 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் 3,092 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்.
புதிதாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டம், சேந்தமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டம், திண்டுக்கல் மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம், கரூர்- திருச்சி கூட்டுக் குடிநீர் திட்டம், புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம், மயிலாடுதுறை கூட்டுக் குடிநீர் திட்டம், தென்காசி கடையநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம், தூத்துக்குடி திருச்செந்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம், ஈரோடு அந்தியூர் கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம், திருவள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டம், காணை கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 16 திட்டங்கள் ரூ.16,875 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த 16 திட்டங்களும் நிறைவுறும்போது 7.5 கோடி மக்களுக்கு 3,627 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்.
முதல்முறையாக புதுக்கோட்டை - விராலிமலை கூட்டுக் குடிநீர் திட்டம், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.
மேலும் 2024-ல் ஏற்பட்ட ஃபெங்கல் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்களிலுள்ள 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிப்படைந்தன. இவை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் 17 பாதாள சாக்கடை திட்டங்கள் ரூ.1,777 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 10 பாதாளச் சாக்கடை திட்டங்கள் ரூ.3,608 கோடியில் நடைபெறுகின்றன. இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...