Published : 26 Mar 2025 05:41 AM
Last Updated : 26 Mar 2025 05:41 AM

தமிழ் - இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் வெளியிட்டார்

தமிழ்நாடு பாடநூல் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ் - இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ‘‘தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ் - இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழுக்கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வு செய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பார்வையில் முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர் கு. அரசேந்திரன் தலைமையில் 2022 ஜூலை முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியர் உட்பட 20 அறிஞர்கள் பணி செய்து வருகின்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தோ - ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானது என ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் வால்டர் ஸ்கீட் கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் கடந்த ஜன.13-ம் தேதி ஒப்பந்தம் செய்தது.

அதன் அடிப்படையில், தமிழ் - இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலையும், முதல் தொகுதி நூலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத் துறையின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலர் வே.ராஜாராமன், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon