Published : 26 Mar 2025 01:11 AM
Last Updated : 26 Mar 2025 01:11 AM

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: பேரவையில் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்த திட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தக கட்டுநர் பயிற்சி முடித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்குதல் உள்பட 6 கோரிக்கைகள் குறித்து, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளால், மார்ச் 17-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் புத்தக கட்டுநர் பதவியில் பணிபுரியும் 359 நபர்களில் 126 பார்வை மாற்றுத் திறனாளிகள் பணிபுரிந்து வருவதால், அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக 34 சதவீதம் பார்வை மாற்றுத் திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலகங்களில் உள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டுநர் உதவியாளர் காலி பணியிடங்களில் 32 புத்தக கட்டுநர் பணியிடங்கள் கடந்த 2021-ம் ஆண்டு அரசாணைப்படி நிரப்பப்பட்டது.

நவீன காலத்திற்கேற்ப பொது நூலகங்களில் உள்ள நூல்கள் மின்மயமாக்கப்பட்டு வருவதாலும், அச்சகங்களில் நவீன ரக இயந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும் புத்தக கட்டுநர் பயிற்சிக்கு மாற்றாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய பயிற்சிகளை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, தமிழக மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 429 மடிக்கணிணிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 2.35 கோடி பெறப்பட்டது. இதில் முதல்கட்டமாக 50 மடிக்கணிணிகள் கொள்முதல் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிச.2-ல் வழங்கப்பட்டது. மீதமுள்ள 379 மடிக்கணிணிகள் விரைவில் வழங்கப்படும். மேலும், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழக அரசு இசைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் சிறப்பு ஆட்சேர்ப்பு நேர்காணல் மூலம் 4 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழக திறன்மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்துகிறது. அவர்களுக்கு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x