Published : 25 Mar 2025 08:19 PM
Last Updated : 25 Mar 2025 08:19 PM

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தின் முன்பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை மாலை இடிந்து விழுந்தது.

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இந்த இல்லம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் அதிகமாக வருவது வழக்கம். மற்ற நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிட வருவார்கள்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடினார். அப்போது, திடீரென பாரதியார் இல்லத்தின் முன் பகுதியான வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவை சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியார் பிறந்த இல்லத்துக்கு வந்து பார்வையிட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியார் இல்லத்துக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்தனர்.

மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், கீழத்தளத்தின் மேற்கூரை பெயர்ந்து காணப்படுகிறது.

நினைவு இல்லமாக்கிய திமுக: 1973-ம் ஆண்டு அப்போது முதல்வராக மு.கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லாமாக மாற்றினார். அப்போதைய அமைச்சர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12.5.1973-ம் தேதி நடந்த விழாவில் பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக முதல்வர் கருணாநிதி அறிவித்து திறந்து வைத்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதன கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்த் தளத்தின் மேற்கூரையின் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து கிடக்கின்றன.

300 ஆண்டுகள் பழமையானது: பாரதியார் இல்லம் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகள் ஆகிறது என கூறப்படுகிறது. இந்த இல்லம் சுமார் 7 தலைமுறை காலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உள்ள தரைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம், தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே புராதனமாக காணப்படுகிறது. இங்கு 4 அறைகள் உள்ளன. முதல் அறையில், பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அங்கேயே பகுதி நேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2-வது அறையில், அவர் பிறந்த இடத்தில் அவருக்கு தனி சிலை வைக்கப்பட்டுள்ளது. 3-வது அறையில், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அவரின் குடும்ப மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள், அவர் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியின் குடும்ப வம்சாவளி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளன. 4-வது அறை சமையலறை. அங்கு புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x