Published : 25 Mar 2025 06:40 PM
Last Updated : 25 Mar 2025 06:40 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்தும், நடத்துநரை பணி நீக்கம் செய்தும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் வரை அரசு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்தில், பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். பள்ளி மாணவ,மாணவிகள் இலவச பயண அட்டையை பயன்படுத்தியும், மகளிர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்காயம் நோக்கி அரசு நகர பேருந்து இன்று (மார்ச் 25) காலை புறப்பட்டது. இந்த பேருந்து ஆலங்காயம் சாலையில் உள்ள வேப்பமரத்து சாலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும். அங்கு அரசுப் பள்ளி மாணவ,மாணவிகள் நிறைய பேர் பேருந்துக்காக காத்திருந்தனர்.
ஆனால், அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜ் என்பவர் பேருந்தை நிறுத்தத்தில் நிறுத்தாமல் வேகமாக இயக்கிச் சென்றார். இதனால், மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அங்கிருந்து புறப்பட்ட அரசு பேருந்தை அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படம் பிடித்தபடி சென்றார். நகர பேருந்து அடுத்த பேருந்து நிறுத்தமான கொத்தக்கோட்டை என்ற இடத்தில் நிறுத்த வேண்டும். அங்கு 12-ம் வகுப்பு தேர்வுக்காக செல்லும் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். ஆனால், நகர பேருந்து அங்கும் நிற்காமல் நேராக சென்றது. ஆனால், தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து ஓடினார்.
இதை பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வீடியோ எடுத்தார். பேருந்து நிற்காமல் செல்வதையும், மாணவி ஒருவர் பின் தொடர்ந்து ஓடுவதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடவே, பேருந்து ஓட்டுநர் முனிராஜ் சிறிது தொலைவு சென்று பேருந்தை நிறுத்தினார். அதன் பிறகு, அந்த மாணவி அந்த பேருந்தில் ஏறி தேர்வு எழுத புறப்பட்டார். இதை செல்போனில் வீடியோ எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ இன்று காலை வைரல் ஆனதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதைதொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் முனிராஜை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்ட நடத்துநர் அசோக்குமார் என்பவரை பணியில் இருந்து விடுவித்தும் அரசு போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் கணபதி உத்தரவின் பேரில் ஆம்பூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன் இன்று உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, மாற்று ஓட்டுநராக ராமலிங்கம் என்பவரையும், நடத்தநராக ஹரிஹரன் என்பவரை நியமித்து ஆலங்காயம் பகுதிக்கு அரசு நகர பேருந்து இயக்கப்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கிராமப்பகுதி வழியாக இயக்கப்படும் அரசு நகர பேருந்துகள் உரிய இடத்தில் நிறுத்துவது இல்லை. குறிப்பாக இலவச பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவ,மாணவிகளை கண்டால் அந்த வழியாக இயக்கக்கூடிய பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக இயக்கப்படுகிறது. தமிழக அரசு மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் எனக்கூறுகிறது.
ஆனால், அதை அரசு போக்குவரத்து கழகம் கிராமப் பகுதிகளில் கடைப்பிடிப்பது இல்லை. பெண்களை கூட்டமாக கண்டாலே பேருந்தை நிறுத்தாமல் செல்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் இதே நிலை தான். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடுத்துநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment