Last Updated : 25 Mar, 2025 06:27 PM

 

Published : 25 Mar 2025 06:27 PM
Last Updated : 25 Mar 2025 06:27 PM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா முன்னாள் வளர்ப்பு மகனுக்கு சம்மன்

சுதாகரன் | கோப்புப்படம்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர், இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் விசாரணை நடத்தினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த வழக்கு கோவை மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி மாதவன், கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள், சாட்சிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுத்த கோரிக்கை, அது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய 18 பேரிடம் போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட சமயத்தில், அதன் பங்குதாரர்களில் ஒருவராக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்தார். அதனடிப்படையில், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வரும் வியாழக்கிழமை (மார்ச் 27) கோவை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x