Published : 25 Mar 2025 02:38 PM
Last Updated : 25 Mar 2025 02:38 PM
சென்னை: பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடி துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோல, காவல் ஆய்வாளர்களாக பணியாற்றியவர்களுக்கு, துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேரடி துணை காவல் கண்காணிப்பாளர்களை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி. சங்கரன், ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மற்றும் வழக்கறிஞர் முகமது முசாமில் ஆகியோர் ஆஜராகி, “தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை தயாரித்து, கூடுதல் எஸ்.பி-கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பணி மூப்பு பட்டியல் தயாரிக்காமல் தற்காலிக அடிப்படையில் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிக்கப்பட்ட 197 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடங்களில், தற்காலிக பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களே அதிகளவில் உள்ளனர். அதேசமயம், 4 நேரடி துணை காவல் கண்காணிப்பாளர்கள் மட்டுமே கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக உள்ளனர்,” என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...