Published : 25 Mar 2025 01:46 PM
Last Updated : 25 Mar 2025 01:46 PM

‘சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம்’ - முத்தரசன் கண்டனம்

சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும் வீடு முழுவதும் கொட்டிய செயல் அநாகரிகத்தின் உச்சமானது. நாகரிக சமூகம் எவ்வகையிலும் ஏற்கத்தக்க செயலல்ல. பொது தளங்களில் ஒருவரது பேச்சு, அடுத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தால் அதன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

அதற்கான சட்டப் பாதுகாப்புகளும் இருக்கின்றன. இந்த முறையான, சட்டரீதியான வாய்ப்புகளை நிராகரித்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x