Published : 25 Mar 2025 06:09 AM
Last Updated : 25 Mar 2025 06:09 AM
சென்னை: மெட்ரோ ரயில் தூணில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கெல்வின் கென்னி ஜெயன் (21). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரது நண்பர் சித்தார்த் (20). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்தார். இருவரும், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காணச் சென்றனர்.
இதற்காக தங்களது இருசக்கர வாகனத்தை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் சென்றனர். பின்னர் போட்டி முடிந்து மீண்டும் ரயில் நிலையம் வந்த அவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மீனம்பாக்கம் சென்றனர். அங்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ராமாபுரம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்கானா வளைவில் வந்தபோது இருசக்கர வாகனம் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி மெட்ரோ ரயில் தூண் மீது மோதியுள்ளது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வந்து உடல்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment