Published : 25 Mar 2025 05:24 AM
Last Updated : 25 Mar 2025 05:24 AM
உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிக்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடினார். பின்னர், ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், செந்தில் பாலாஜி இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜாமீன் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள செந்தில்பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...