Published : 24 Mar 2025 06:50 PM
Last Updated : 24 Mar 2025 06:50 PM
புதுடெல்லி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளியூர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், சில ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, சென்னையிலிருந்து - மண்டபம் வரையிலான இரு மார்க்கத்திலும் விருத்தாச்சலம், திருச்சி, காரைக்குடி வழியாக விரைவு வண்டி இயக்க வேண்டும். கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாக மண்டபம் செல்லவும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment