Last Updated : 24 Mar, 2025 04:25 PM

1  

Published : 24 Mar 2025 04:25 PM
Last Updated : 24 Mar 2025 04:25 PM

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8-வது ஊதிய கமிஷனை உருவாக்க வேண்டும்; புதிய பணியிடங்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்; ரயில்வேயில் நேரடி பதவிகளை சரண்டர் செய்வதை நிறுத்தவேண்டும்; ரயில்வே பணிகளில் தனியார் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசியது: “எங்களது 16 அம்ச கோரிக்கைகளில் மிக முக்கிய கோரிக்கை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதுபோல, வெளிமாநிலத்தில் இருந்து வந்து பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவர்கள் மாநிலத்தில் பணியமர்ந்த பலமுறை கடிதம் மூலமாக, மாற்ற கோரி வலியுறுத்தி மாற்றாமல் உள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.

தற்போது வரை, மத்திய அரசு 8-வது ஊதிய உயர்வு இன்னும் வழங்காமல் உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.51,000 வழங்க வேண்டும். ரயில்வேயின் முதுகெலும்பாக திகழும் தண்டவாளப் பணியாளர்களை ரயில்வே கேட், தண்டவள பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால், அவர்கள் அலுவலகப் பணியை மேற்கொள்கின்றனர். மேலும், ஒரு சில ஊழியர்கள் ரயில்வே அதிகாரிகள் இல்லத்தில் பணியாற்றுகிறார்கள. வேறு எங்கோ வேலை செய்துவிட்டு, சம்பளத்தை இங்கே வாங்குகிறார்கள். ரயில்வே துறைக்கு நஷ்டத்தை உண்டாக்குகிறார்கள்.

எழும்பூரில் மட்டும் 14 பேர், தண்டவாள பராமரிப்புப் பணி ஈடுபடாததால், மற்றவர்களுக்கு பணி சுமை அதிகரித்து வருகிறது. இதற்கு சென்னை ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே தண்டவாளப்பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும்'' என்று அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கச் செயல் தலைவர் சூர்யபிரகாஷ், செயல் பொதுச்செயலாளர் ராஜாராம்,
கோட்ட தலைவர் முரளி, கிளை செயலர் கார்த்கிகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x