Published : 24 Mar 2025 02:45 PM
Last Updated : 24 Mar 2025 02:45 PM
சென்னை: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (மார்ச் 24) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.
இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அதிமுக பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...