Published : 16 Jul 2018 08:40 AM
Last Updated : 16 Jul 2018 08:40 AM

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலப் பணி; ரூ.115 கோடி திட்ட செலவில் மாற்றியமைக்க திட்டம்

7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பால திட்டத்தை ரூ.115 கோடியில் மாற்றியமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில் - ஒரகடம் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், சிங்கப்பெருமாள் கோவில், ஜிஎஸ்டி சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில், ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. ஜிஎஸ்டி சாலையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கடவுப்பாதையை கடந்து, ஸ்ரீபெரும்புதுார், பாலுார் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால், இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட், ஒரு நாளைக்கு, 30 முறைக்கு மேல் மூடப்படுவதால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதன் விளைவாக ஜிஎஸ்டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, சிங்கப்பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் கட்ட 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்பட்டது. ரூ.22 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலத்தைக் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் நில எடுப்பு, ரயில்வே துறை, மத்திய நெடுஞ்சாலைத் துறைகளிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட காரணங்களால் மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டது.

தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாமல்லபுரம் - எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில், 133.65 கிமீ தூரத்துக்கு ரூ.6673 கோடி யில் 6 வழி சாலையாக, சென்னை சுற்றுவட்டச் சாலை அமையவுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் வழியாக இந்த புதிய சுற்றுவட்டச் சாலை அமைகிறது. அந்த புதிய சுற்றுவட்டச் சாலையுடன் இந்த மேம்பாலத்தை இணைக்கும் வகையில் தற்போது திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.115 கோடியில் மேம்பால திட்டம் தயாரிக்கப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சிப்காட் தொடங்கப்பட்ட போது சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் சாலை 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டது. பிறகு 6 வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. தற் போது இந்த சாலை சென்னை சுற்றுவட்டச் சாலையுடன் இணைகிறது. இதனால் சிங்கப்பெருமாள் கோவிலில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்த ரூ.22 கோடி நிதியில் புதிய திட்டப்படி மேம்பாலம் அமைக்க முடியாது என்பதால் புதிதாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.115 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேம்பால பணியை சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டத்தில் சேர்த்து மேற்கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளோம். ஓரிரு வாரங்களில் அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசு அனுமதி வழங்கிய பின் மேம்பாலம் பணி தொடங்க டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x