Published : 24 Mar 2025 06:30 AM
Last Updated : 24 Mar 2025 06:30 AM
சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தொடர்பாக பயணிகளின் கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், இந்த ரயில் சேவையை நீட்டிப்பது தற்போது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே, கூடுதல் மின்சார ரயில் சேவைகளை தொடங்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேவும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையேவும் புதிய மின்சார ரயில் சேவை இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த ரயில் சேவையை நீட்டிப்பு செய்தும், நேரத்தையும் மாற்றியமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச்சங்கத் தலைவர் முருகையன் விடுத்த கோரிக்கை மனுவில், சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் இரண்டு ரயில்களையும் திருவள்ளூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் . கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஏற்கெனவே இயக்கிய நள்ளிரவு 12.15 மணி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு ரயில்வே தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கூறியுள்ளதாவது: ஆவடி ரயில்களை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தற்போது சாத்தியமில்லை. சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையிலிருந்து ஆவடிக்கு புறப்படும் ரயில்கள் அவற்றின் இயக்கத்துக்குப் பிறகு, ஆவடி கார் ஷெட்டில் பராமரிப்புக்காக அனுப்பப்படுகின்றன. இருப்பினும், இது தொடர்பான உங்கள் பரிந்துரை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படலாம். உங்கள் பிற பரிந்துரைகள் கவனிக்கப்பட்டுள்ளன.
அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் 12 பெட்டி ரயில்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் மற்றும் பிற தவிர்க்க முடியாத செயல்பாட்டு காரணங்களால் 2023-ம் ஆண்டில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும், பராமரிப்பு பணிகள் முடிந்ததும், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை மீட்டெடுப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...