Published : 24 Mar 2025 06:20 AM
Last Updated : 24 Mar 2025 06:20 AM
சென்னை: இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மீதான தாக்குதலுக்கு, மருத்துவ அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விடுதி செயல்படுகிறது.
விடுதியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக இரவு 10 மணிக்கு மேல் வெளியே வந்துள்ளார்.
அப்போது அவருக்கும், அங்குள்ள காவலாளி மற்றும் ஒப்பந்த ஊழியருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பணியாளர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த பயிற்சி மருத்துவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் மு.அகிலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயிற்சி மருத்துவரை, மருத்துவக் கல்லூரி முதல்வரின் உதவியாளரும், தனியார் செக்யூரிட்டி ஆட்களும் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு கடுமையாகத் தாக்கியுள்ளது அதிர்ச்சிகரமானது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரியில் பயிற்சி மருத்துவரை கண்ணியக்குறைவுடன் நடத்தி, கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய கல்லூரி முதல்வர் மற்றும் விடுதிக் காப்பாளருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், ‘பயிற்சி மருத்துவரை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். கடுமையான போட்டியை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பில் நுழைந்துள்ளனர்.
அதைப்போல எத்தனையோ கனவுகளுடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்துள்ள நிலையில், தங்கள் மகன் மீது தாக்குதல் தொடுத்தது எந்த அளவு அவர்களை காயப்படுத்தி இருக்கும். அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வண்ணம் இதற்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...