Published : 24 Mar 2025 06:15 AM
Last Updated : 24 Mar 2025 06:15 AM

மத்​திய அரசை கண்​டித்து ரயில் மறியல் போராட்​டம்: சென்னை​யில் 40 விவ​சா​யிகள் கைது

பஞ்சாபில் விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்ததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்தனர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூரில் மார்ச் 23-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.

அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் வந்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதையும் மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்றதால் 40 விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது: விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும் என்று 2014 மக்களவை தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது. கடந்த 12 ஆண்டுகளாகியும் இதை நிறைவேற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள போராடும் உரிமையை உறுதி செய்ய கோரியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. சென்னை மட்டுமின்றி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூரிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x