Published : 24 Mar 2025 06:03 AM
Last Updated : 24 Mar 2025 06:03 AM
தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 24) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25, 26-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், வரும் 26, 27-ம் தேதிகளிலும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.
மார்ச் 23-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment