Published : 24 Mar 2025 12:40 AM
Last Updated : 24 Mar 2025 12:40 AM
அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இயக்கம். இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை, என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான அறிவிப்பாக தான் பார்க்க முடிகிறது. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது.
தொகுதி மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அதில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டிருந்தால், முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முயற்சி பலனளிக்கும் என்று சொல்லலாம்.
நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி, திமுக ஆட்சியின் லஞ்சம், ஊழலை மறைக்க நடத்தப்பட்டது. மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தியின் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது நிருபணம் ஆகியுள்ளது.
அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இயக்கம். இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும்போது, அது குறித்த முடிவினை தெரிவிப்போம். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரியை முறியடிக்க வியூகம் அமைத்து, அதிக வாக்குகள் பெற்று எதிரியை வீழ்த்துவது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல, கொலை நிலவரம் பற்றி தற்போது செய்திகள் வெளியாகின்றன. திருநெல்வேலியில் ஜாகீர்உசேன் வெட்டி கொல்லப்படுகிறார். திமுக ஆட்சியில் இன்று இருப்பவர்கள், நாளை உயிருடன் இருப்போமா, இல்லையா என்று தெரியாது என்ற நிலைதான் உள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால் ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. அதில் 15 அறிவிப்புகளை தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின்போது கரோனா காலகட்டம். அப்போது யாரும் வேலைக்கு வரவில்லை. அதனால் அவர்களுக்கு கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பல திட்டங்களை நிறுத்தியது தான் திமுக ஆட்சியின் சாதனை. திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். இப்போது போராட்டம் நடத்துகின்றனர், என்றார். பேட்டியின்போது, சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக-வினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...