Published : 24 Mar 2025 12:21 AM
Last Updated : 24 Mar 2025 12:21 AM
வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையலாம். இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவர்கள், டெலிவரி பணியில் உள்ளவர்கள், காவல்துறையினர், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். உப்பு - சர்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம். தமிழகத்தில், கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைகளுக்கும் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment