Published : 24 Mar 2025 12:18 AM
Last Updated : 24 Mar 2025 12:18 AM
கோடை வெப்பத்தை சமாளிக்க ஓட்டுநர், நடத்துநருக்கு மோர், ஓஆர்எஸ் கரைசல் வழங்க போக்குவரத்துக் கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கோடை காலத்தை முன்னிட்டு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பேருந்து நிலையங்கள், நேரக் கண்காணிப்பாளர் அறைகள், உணவகம், ஓய்வு அறைகள் உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் குறைந்தபட்சம் ஒருமுறை நீர் அருந்த வேண்டும். அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ஓஆர்எஸ் பொட்டலங்களை வழங்கி, அந்த கரைசலை அருந்துவதன் மூலம் கடுமையான வெப்ப நிலையில் உடலில் நீர்சத்து குறையாமல் பூர்த்தி செய்ய உதவ வேண்டும்.
ஒவ்வொரு பணிமனை, இதர வேலைப்பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வெப்பத்தால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் பொருட்கள் கொண்ட முதல் உதவி பெட்டிகள் வைக்க வேண்டும். பேருந்துகளில் உள்ள ஏர்கண்டிஷன் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளுக்குள் காற்றோட்டம் சீராக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
பழுதடைந்த விசிறிகளை, ஓய்வு அறைகள், அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் சரிசெய்ய வேண்டும். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பதை தவிர்க்க, கடுமையான வெப்ப நேரங்களில் போதிய ஓய்வு வழங்க வேண்டும். அலுவலக அறிவிப்புகள், கூட்டங்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் மூலம் பணியாளர்களுக்கு வெப்ப கால பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இயக்கப்படும் 3,407 மாநகர பேருந்துகளில் 1,994 பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment