Published : 23 Mar 2025 04:42 PM
Last Updated : 23 Mar 2025 04:42 PM

குன்னூரில் ராணுவ அதிகாரிகளின் குதிரை சாகசம் - பார்வையாளர்கள் பரவசம்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ அதிகாரிகள் அசத்திய குதிரை சாகசம், நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாக குதிரை சவாரி, ஜிம்கானாவில் நடத்தப்பட்டு வருகிறது.

குன்னூரில் மவுன்டன் ஜிம்கானா என்ற பெயரில் ஆண்டுதோறும் குதிரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில், கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டெண்ட் வீரேந்திர வாட்ஸூக்கு பாரம்பரிய உடைகள் அணிந்து குதிரைகளில் கம்பீரமாக வரவேற்பு அளித்தனர்.

பின்பு தேசியக் கொடிகள் மற்றும் பயிற்சி கல்லூரியின் கொடியை குதிரைகளில் எடுத்து வந்த வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்பு, அதிகாரிகளின் குதிரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குதிரைக்கான ஓட்டப் பந்தயம், ஆசர்லே, 5 ஜம்பிங், ஷோ ஜம்பிங்க், டிரிக் ஜம்பிங், உட்பட பல்வேறு போட்டிகளில் வீரர்கள் அசத்தினர்.

மேலும், குதிரைகளில் வேகமாக வரும் வீரர்கள் ஈட்டியை கொண்டு துள்ளியமாக ஒரு பொருளை குத்தி எடுக்கும் போட்டி அனைவரையும் கவர்ந்தது. பின்பு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளையம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டர் சைக்கள் மற்றும் ஜிப்சி ஜீப்கள் மீது பாய்ந்து குதிரைகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டியும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ராணுவ பயிற்சி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜென்ரல் வீரேந்திர வாட்ஸ் கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x