Published : 23 Mar 2025 04:37 PM
Last Updated : 23 Mar 2025 04:37 PM

''நீலகிரி மாவட்ட மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை'' - அமைச்சர் மா.சு. பெருமிதம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஏப்ரல் 6ம் தேதி உதகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உதகையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துமவனை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழங்குடியினருக்கான பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். பின்னர் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழக முதல்வர் ஸ்டாலின் வழி காட்டுதல் படி பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு மருத்துவமனை ரூ.16.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு, குன்னூர் அரசு மருத்துவமனை யில் ரூ.2.66 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர், வலி மற்றும் பராமரிப்பு மையமும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.30 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடமும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டபெட்டு, மசினகுடி, அம்பலமூலா, கிண்ணக்கொரை, கூக்கல், தும்மனட்டி ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் நலவாழ்வு மையங்களும், முள்ளிமலை, மசக்கல், நெடிக்கோடு, சேலாஸ் ஆகிய நான்கு இடங்களில் புதிதாக ரூ.1.10 கோடி செலவில் துணை சுகாதார நிலையங்களும், ரூ.1.25 கோடி செலவில் தெப்பக்காடு மற்றும் இத்தலார் ஆகிய இரண்டு இடங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடம் மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு கட்டடமும், ஆர்.கே.புரம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடமும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூ.31 கோடியில் கூடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் தமிழக முதல்வர் தலைமையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக ரூ.146.23 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து மழை உட்பட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத் துறை கட்டமைப்பு நிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் உதகையில் தான்.

இம்மருத்துவமனையில் எம்ஆர்ஐ., சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 5, 6ம் தேதிகளில் வருகை புரியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் 6ம் தேதியன்று நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார்.

மேலும், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவ மனையில், ரூ.8.60 செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைக்கிறார். பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நீலகிரியில் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கி பணியாற்றுவதில் சிரமம் இருந்து வந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுதிகள், குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறையில் காலி பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 1071 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் நீலகிரியில் நியமிக்கப்பட்டனர். அதன் பின் 36 காலி பணியிடங்கள் இருந்தது. அதை நிரப்பும் வகையில் கடந்த 4ம் தேதி நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் 36 பேர் நீலகிரியில் நியமிக்கப்ப ட்டுள்ளனர். நீலகிரியில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் காலி இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கநாதன், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் ரமேஷ் மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உட்பட பலர் உடனிருந்தனர்.

பழங்குடியினருக்கு என தனியாக 50 படுக்கைகள் கொண்ட வார்டு அமைப்பு: இம்மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட போது நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், இம்மருத்துவமனையில் பழங்குடியினர்களுக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களு க்கு 20 படுக்கைகள் மற்றும் குழந்தைகள், மகப்பேறுக்கு என்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட பழங்குடியினருக்கான வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பழங்குடியினருக்கென 50 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது உதகை அரசு மருத்துவமனையில் தான் என்பது சிறப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x