Published : 23 Mar 2025 12:48 PM
Last Updated : 23 Mar 2025 12:48 PM
நுங்கம்பாக்கம் நமச்சிவாயபுரம் மேம்பாலத்தின் மீது வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாசகர் ஒருவர் உங்கள் குரலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ரமேஷ் என்பவர் 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'உங்கள் குரல்' சேவையைத் தொடர்பு கொண்டு கூறியதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் வசித்து வருகிறேன். நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, நமச்சிவாய புரத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தனிநபர்கள் தங்களது கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர்.
அதேபோல், கால்டாக்சி நிறுவனங்களின் கார்கள், அமரர் ஊர்தி, சிறிய ரக சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இப்பாலத்தின் இரு புறங்களிலும் நிறுத்தப்படுகிறது. இதனால், இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முன்பு மழைக் காலத்தில் இப்பகுதியில் தேங்கும் நீரால் வாகனங்கள் சேதம் அடைவதை தடுக்க வாகனங்கள் பாலத்தின் மீது நிறுத்தப்பட்டது.
தற்போது இது வாடிக்கையாகிவிட்டது. தங்கள் வீட்டில் பார்க்கிங் வசதி இல்லாதவர்களும், கடைகள் மற்றும் அலுவலகங்க ளில் பார்க்கிங் வசதி இல்லாதவர்களும் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்தி விடுகின்றனர். அத்துடன், பாலத்தின் ஓரத்தில் கட்டிடக் கழிவுகளும் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. போக்குவரத்து போலீஸாரும் மாநகராட்சி யும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment