Published : 23 Mar 2025 06:55 AM
Last Updated : 23 Mar 2025 06:55 AM
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில், எந்தச் சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறைய கூடாது, குறையவிட கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுவரையறை கிடைக்கும் வரை நாம் இணைந்து ஒற்றுமை உணர்வோடு போராடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தொடக்க உரை நிகழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக்கிற, ஆட்சி செய்கிற ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்திருப்பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். சிறந்த வளர்ச்சியை அடைய முடியும். அனைத்து தரப்பு மக்களும் போராடியதால்தான், நாட்டுக்கு விடுதலை கிடைத்தது.
இதை உணர்ந்துதான், அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த மேதைகள், இந்தியாவை கூட்டாட்சி கொண்ட ஒன்றியமாக கட்டமைத்தனர். பல்வேறு காலகட்டங்களில் இந்த கூட்டாட்சி தன்மைக்கு சோதனை வந்தாலும், அதை ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் தடுத்து வந்துள்ளன. அத்தகைய சோதனை, ஆபத்து இப்போதும் வந்துள்ளது. அதை உணர்ந்துதான் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.
இங்கு இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை தண்டிப்பதாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கை இருக்கப் போகிறது. அடுத்து நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வது, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும்.
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவேதான் இதை கடுமையாக, ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றி எரிகிறது. ஆனால், நீதிக்கான அவர்களது குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை, நமது அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். தொகுதி எண்ணிக்கை அல்லது நமது மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தால், நம் சொந்த நாட்டில் நாம் அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது.
இது வெறும் எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. இது நமது அதிகாரம், உரிமைகள், எதிர்காலம் நலன்கள் பற்றியது. பிரதிநிதித்துவம் குறைந்தால், நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதியை பெறுவதற்குகூட போராட வேண்டிவரும். எப்போதும் மாநிலங்கள், மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக இருந்துள்ளது. இதை எந்த மாநிலமும் அனுமதிக்க கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, இதுவரை இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்ற ஒற்றுமையை இந்த அரங்கில் உள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும்.
நமது இந்த போராட்டம் தொகுதி மறுவரையறைக்கு எதிரானது அல்ல. தொகுதி மறுவரையறை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதையே இந்த போராட்டம் வலியுறுத்துகிறது. நம்உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்வது மிக அவசியம். மத்திய அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்தசூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, குறையவிடகூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுவரையறை கிடைக்கும் வரை நாம் இணைந்து போராடுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment