Published : 23 Mar 2025 06:46 AM
Last Updated : 23 Mar 2025 06:46 AM

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் வஞ்சிப்பதா? - முதல்வர்கள் கேள்வி

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவர் கே.டி.ராமாராவ் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் மத்திய அரசு வஞ்சிக்க முயற்சிப்பதாக சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேளரா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

கேரள முதல்வர் பினராயி விஜயன்: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று இந்திய அரசியல் சாசனம் தெளிவாக கூறுகிறது. மத்திய-மாநில அரசுகளின் அதிகாரத்தை சமமாக கருதுகிறது. அந்த வகையில், தற்போதைய தொகுதி மறுவரையறை நடவடிக்கை, இந்த சமநிலையை சிதைக்கும். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்களை தண்டிப்பதாக அமையும்.

மேலும், நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், பன்மொழி கலாச்சாரத்துக்கும் அது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். எனவே, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துகளை பெற்று அதன்பிறகு தொகுதி மறுவரையறை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநிலங்களின் கருத்தொற்றுமையை பெற்ற பின்னரே இந்த பணியை செய்ய வேண்டும். அதோடு, தொகுதி மறுவரையறை நடவடிக்கை தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையில் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா அல்லது மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்படுமா என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: நாடு முழுவதும் நடைமுறைப்படுத்திய 1976 குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தின. ஆனால், வடஇந்திய மாநிலங்கள் அதை சரியாக நிறைவேற்றவில்லை. இன்றைய தினம் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்கள் பலனடையும். இது நியாயமானது அல்ல. தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்கு எதிராக தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பான அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அதே வழிமுறையைத்தான் பின்பற்றினார். அதைபோல் பிரதமர் மோடியும் தொகுதி மறுவரையையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் அனைவரும் கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். இதற்கான நடவடிக்கைகளை டெல்லியிலும் மேற்கொள்ள வேண்டும்.

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்: தற்போது இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளில் 2.39 சதவீதம் என்ற வகையில் 13 தொகுதிகள் பஞ்சாப் மாநிலத்துக்கு இருக்கிறது. இதுவே 850 இடங்கள் உருவாகும் பட்சத்தில் 5 இடங்களை எங்களுக்கு கூடுதலாக ஒதுக்கினால் கூட 2.11 சதவீதம் என்றளவில் பிரதிநிதித்துவம் குறையும். பிரதிநிதித்துவத்தை 2.40 சதவீதம் என்றளவில் அதிகப்படுத்த வேண்டுமானால் 21 இடங்களை வழங்க வேண்டும். அவர்கள் பஞ்சாப், தென்மாநிலங்களில் இனி வெற்றி பெற முடியாது என்பதால் இங்கெல்லாம் இடங்களை குறைத்து, இந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கின்றனர். இந்த சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை எடுத்திருக்கும் தமிழகத்தோடு பஞ்சாப் என்றைக்கும் துணை நிற்கும்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. சமூக நீதி, சமத்துவம் மட்டுமல்லாமல் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிலும் நாம் ஒன்றுபட்டு காணப்படுகிறோம். நாட்டில் உள்ள இக்கட்டான சூழலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது, கல்வி மேம்பாடு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் முன்னிலையில் இருக்கும் தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களை நாடாளுமன்ற மக்களவை மறுவரையறை மூலம் மத்திய அரசு வஞ்சிக்க முயல்கிறது.

இதை தடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். இது வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை இல்லை. கூட்டாட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினை. எந்தச் சூழ்நிலையிலும் நமது உரிமைகளையும், தொகுதிகளையும் விட்டுத் தரக்கூடாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம்.

பாரத் ராஷ்டிர சமிதி கட்சி செயல் தலைவர் கே.டி.ராமாராவ்: நாங்கள் 14 ஆண்டுகள் மத்திய அரசை எதிர்த்து போராடி தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினோம். நமது அடையாளத்தை எப்படி பாதுகாப்பது, நமது கூட்டாட்சி தத்துவத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து தமிழகம் எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவீதம் 5 தென்மாநிலங்களின் பங்களிப்பாகும். ஆனால், அதேசமயம் சிறிய அளவிலான பங்களிப்பு தொகைதான் மத்திய அரசிடமிருந்து கிடைக்கிறது.

மத்திய அரசு திட்டங்களில் தென்மாநிலங்கள் பாரபட்சம் காட்டப்படுகிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை அதிகரிப்பதாக மத்திய அரசு கூறுவதை, நாம் கவனத்துடன் அணுக வேண்டும். தெலங்கானா மாநிலம் 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மறுசீரமைப்புக் குழு உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் 11 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழு உருவாக்கப்படவில்லை.

காணொலி காட்சி மூலம் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்: நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மாநிலங்கள் தங்களின் சொந்த முயற்சிகள் மூலம் தேசிய அளவிலான இந்த மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், பங்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது கடினமாக உழைத்து மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநியாயம் இழைப்பதாகும். ஒடிசா குழந்தை பிறப்பு விகிதத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது. எனவே தொகுதி மறுவரையறைக்கு மக்கள் தொகை அளவு மட்டுமே அளவுகோலாக இருக்கக் கூடாது. மேலும், இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவாக ஆலோசனை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினர்.

இந்த விவகாரத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்தலைவரும் ஆந்திரா முன்னாள் முதலவருமான ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம்: 1971 முதல் 2011 வரையிலான 40 ஆண்டு காலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலத்தில் இப்பங்கு மேலும் குறைந்துள்ளதாக நம்புகிறோம். மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக இப்பங்கு குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில், மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டில் தென் மாநிலங்களின் பங்கேற்பு கணிசமாக குறையும். அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பை திருத்த வேண்டியது மிக அவசியம். நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட இப்பிரச்சினையில் தீர்வு காண உங்கள் தலைமையும் வழிகாட்டுதலும் மிக முக்கியமானவை. உங்களின் ஒரு உத்தரவாதம், பல மாநிலங்களின் அச்சங்களை போக்க பெரிதும் உதவும்.

6 மாநிலங்​கள், 14 கட்​சிகள் பங்கேற்பு: கூட்டு குழு கூட்​டத்​தில் 3 மாநில முதல்​வர்​கள் தவிர, கேரளா​வில் இருந்து பினோய் விஸ்​வம் (இந்​திய கம்​யூனிஸ்ட்), சலாம் (இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக்), பிரேமசந்​திரன் (புரட்​சிகர சோஷலிஸ்ட்), கும்​பக்​குடி சுதாகரன் (காங்​கிரஸ்), ஜோஸ் கே.மணி (காங்​கிரஸ்​-மணி), பிரான்​சிஸ் ஜார்ஜ் (கேரளா காங்​கிரஸ்), தெலங்​கா​னா​வில் இருந்து மகேஷ் கவுட் (காங்​கிரஸ்), இம்​தி​யாஸ் ஜலில் (ஏஐஎம்​ஐஎம்), கே.டி​ரா​மா​ராவ் (பிஆர்எஸ்), ஒடிசா சஞ்​சய் குமார் தாஸ் பர்​மா, அமர் பட்​நாயக் (பிஜு ஜனதா தளம்), பஞ்​சாபில் இருந்து சர்​தார் பல்​வீந்​தர் சிங் (சிரோமணி அகாலி தளம்) என மொத்​தம் 6 மாநிலங்​களைச் சேர்ந்த 14 கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர்.

நினை​வுப் பரிசு: கூட்​டத்​தில் பங்​கேற்றோருக்கு பத்​தமடை பாய், தோடர் சால்​வை, காஞ்சி கைத்​தறி பட்​டுப்​புட​வை, ஊட்டி வர்க்​கி, கன்​னி​யாகுமரி கிராம்​பு, கோவில்​பட்டி கடலை மிட்​டாய், ஈரோடு மஞ்​சள், கொடைக்​கானல் பூண்டு ஆகிய தமிழகத்​தின் சிறப்பு வாய்ந்த பொருட்​களை மகளிர் சுயஉதவி குழு​வினர் தயாரித்த பெட்​டி​யில் வைத்து நினை​வுப் பரி​சாக முதல்வர் ஸ்டாலின் வழங்​கி​னார்.

தாய்​மொழி​யில் பெயர்: கூட்​டத்​தில் பங்​கேற்ற தலை​வர்​களின் பெயர் பலகை​யில் ஆங்​கிலம், அவர​வர் தாய்​மொழி​யில் வைக்கப்​பட்​டிருந்​தது. ஒவ்​வொரு​வரும் பேசுவதை தமிழ், ஆங்​கிலம், மலை​யாளம், இந்​தி, பஞ்​சாபியில் கேட்​கும் வசதி செய்​யப்​பட்டிருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x