Published : 23 Mar 2025 06:33 AM
Last Updated : 23 Mar 2025 06:33 AM
தந்தைக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் வரலாம் என்று, கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. மகன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவரை கடந்த 18-ம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. விசாரணையில், ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது தவுபீக் என்ற கிருஷ்ணமூர்த்திக்கும் இடையேயான இடப் பிரச்சினையில் இக்கொலை நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, முகமது தவுபீக், அவரது மனைவி நூர்நிஷா, சகோதரர் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த முகமது தவுபீக்கை, தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களது உறவினரான, பிளஸ்-1 பயிலும் 16 வயது சிறுவனும் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. அந்த சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து, அவனைக் கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலியும், தனது தந்தையைப்போல வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், “அடுத்த இலக்கு நான்தான். எனது தந்தைக்கு ஏற்பட்ட நிலை, எனக்கும் ஏற்பட்டால், எதிர்காலத்தில் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும். நான் வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், எங்கள் வீட்டை வீடியோ பதிவு செய்தார். நான் வெளியே சென்றதும், உடனடியாக அவர் வாகனத்தில் சென்றுவிட்டார். சாவுக்கு பயந்து நாங்கள் இல்லை. அதற்கு பின்னர் உள்ள பொறுப்பை நினைத்துதான் கவலைப்படுகிறோம்.
வழக்கு பதிவு செய்து 4 நாட்களாகியும் குற்றவாளியின் மனைவியைப் பிடிக்க முடியவில்லை. அவரை எப்போது பிடிக்க போகிறீர்கள்?. குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்க வேண்டாம். அது அரசுக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தும். நான் பதற்றப்படவில்லை. பிரச்சினையை எளிதாக கையாளுகிறேன். அதிகாரிகளுக்கு அரசு உதவியாக இருப்பதால்தான், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி. முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை விட்டுவிட மாட்டேன். நடவடிக்கை எடுத்தால் எனது வேலையை பார்த்துக் கொண்டு இருப்பேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, இவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment