Published : 23 Mar 2025 06:23 AM
Last Updated : 23 Mar 2025 06:23 AM
மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும். அதுவரை, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் நிலை நீடிக்க வேண்டும் என்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு குழு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மத்திய அரசுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. முதல்வரின் அழைப்பை ஏற்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என மொத்தம் 7 மாநிலங்களை சேர்ந்த 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின், ‘‘எந்த சூழலிலும் நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைய கூடாது என்ற உறுதியோடு, ஒற்றுமை உணர்வோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம்’’ என்றார்.
தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கினார். ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக கலந்துகொண்டு, தனது கருத்துகளை எடுத்துரைத்தார். திமுக எம்.பி. கனிமொழி, கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்து வாசித்தார்.
நிறைவாக, கூட்டு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
* மாநிலங்களின் எதிர்கால அரசியல், பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழக முதல்வர் எடுத்துள்ள முயற்சியை இக்குழு பாராட்டுகிறது.
* மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல், தெளிவு, வெளிப்படைத்தன்மை இல்லாமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு கூட்டு நடவடிக்கை குழு கவலை தெரிவிக்கிறது.
* ஜனநாயகத்தை மேம்படுத்த, தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும்.
* மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாத்து, ஊக்கமளிப்பதுதான் 42, 84, 87-வது அரசியலமைப்பு சட்ட திருத்தங்களின் பின்னணி நோக்கம் என்றபோதிலும், தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்துதல் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. இந்த உண்மையை கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது உள்ள மக்களவை தொகுதிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு இதே நிலையில் நீட்டிக்கப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வதை அதுவரை தள்ளிவைக்க வேண்டும்.
* மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை திறமையாக செயல்படுத்தி, மக்கள்தொகையை வெகுவாக குறைத்துள்ள மாநிலங்களை தண்டிக்கும் விதமாக தொகுதி மறுவரையறை இருக்க கூடாது. மக்கள்தொகையை குறைத்துள்ள, இந்த மாநிலங்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு முயற்சிகளையும் முறியடிக்க அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் இந்த குழு மேற்கொள்ளும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமரிடம் இக்குழு சார்பில் இதுதொடர்பான கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக தங்கள் மாநில சட்டப்பேரவையில் தனியாக தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
* தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும், மறுவரையறையால் ஏற்படும் என தற்போது முன்மொழியப்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் அந்தந்த மாநில மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிறைவாக, டி.ஆர்.பாலு எம்.பி. நன்றியுரை நிகழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...