Published : 22 Mar 2025 03:51 PM
Last Updated : 22 Mar 2025 03:51 PM

“இது எண்களைப் பற்றியது அல்ல; நமது அடையாளத்தைப் பற்றியது” - டிகே சிவகுமார்

சென்னை: “தொகுதி மறுரையறை என்பது எண்களைப் பற்றியது அல்ல; அது நமது அடையாளத்தைப் பற்றியது.” என்று கர்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய டிகே சிவகுமார், “தமிழக முதல்வர் சகோதரர் மு.க.ஸ்டாலின் கூட்டி இருக்கும் இந்த கூட்டத்தில், தென் மாநிலங்கள் ஒன்றுபட்டு நிற்கின்றன. இது பாராட்டுக்குரியது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காலில் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக இன்று கூட்டத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்தப் போராட்டம் வெறும் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல; நமது அடையாளம், நமது கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரியத்தைப் பற்றியது. நமக்கு 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது. நாட்டின் கலாச்சார, பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுமானால், அது தென் மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதலாக அமையும். நமது மாநிலங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் வளர்ச்சியின் தூண்களாக இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக திகழ்கின்றன. சமூக வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றன. மக்கள் தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்துகின்றன.

இப்போது மத்திய அரசு, நமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. தேசிய விவாதத்தில் நமது குரல்களை திறம்பட அடக்குகிறது. இது நியாயமற்றது மட்டுமல்ல. வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படக்கூடாது.

அநீதியான சூத்திரத்துடன் மத்திய அரசு செயல்படுமானால், அது கூட்டாட்சி சமநிலையை மாற்றிவிடும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு விகிதாச்சாரமற்ற அதிகாரத்தை வழங்கும்.

இது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போர் அல்ல. மாநிலங்களின் ஒன்றியம் என்ற இந்தியாவின் பார்வையை மீட்டெடுப்பதற்கான போராட்டம் இது. நியாயமான பிரதிநிதித்துவத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க இந்த வரலாற்றுப் போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.

எங்கள் குரல்கள் நீர்த்துப்போகவோ, எங்கள் வளங்கள் கொள்ளையடிக்கப்படவோ, எங்கள் கலாச்சாரங்கள் அழிக்கப்படவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பன்முகத்தன்மை கொண்டாடப்படும், சமத்துவம் நிலைநிறுத்தப்படும். இந்தியாவின் கூட்டாட்சியை மீட்டெடுக்க ஒன்றாகப் போராடுவோம். ஒன்றாக இணைவது ஒரு தொடக்கம்; ஒன்றாக விவாதிப்பது முன்னேற்றம்; ஒன்றாக வேலை செய்வது வெற்றி.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x