Published : 22 Mar 2025 03:20 PM
Last Updated : 22 Mar 2025 03:20 PM

‘25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு கூடாது’ - கூட்டு நடவடிக்கை குழுவின் 7 தீர்மானங்கள் என்னென்ன?

சென்னை: ‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்றக் கூட்டம் நிறைவடைந்தது. பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம்:

> மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்.

>1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.

> மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.

> தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.

> நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும்.

> கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர்.

> கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் வரமுடியாத சூழ்நிலை. அவர்கள் பங்கேற்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான், மகளிர் மசோதா நடைமுறைக்கு வரும் என தெளிவாகக் கூறினா். ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம். அங்கு, கட்டாயம் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், அண்மையில் உள்துறை அமைச்சர் தமிழக வருகையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.

தொகுதி மறுவரையறை குறித்து எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான், ஒரு தெளிவான பதிலை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாங்கள் எங்களுக்கான உரிமைகளை கேட்கிறோம். இது எந்த மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நான் என்னுடைய உரிமையைக் கேட்பது என்பது, உங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தமில்லை. மத்திய அரசின் இந்த அநீதியால், ஒருசில மாநிலங்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் சரியான தொகுதி மறுவரையைறைக் கோருகிறோம்.

அடுத்தக் கூட்டம்: தொகு மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்று கனிமொழி தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்: தமிழக முதல்வர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x