Published : 22 Mar 2025 01:05 PM
Last Updated : 22 Mar 2025 01:05 PM

“கூட்டாட்சி மத்திய அரசு தரும் பரிசு இல்லை, அது மாநில அரசுகளின் உரிமை” - கேரள முதல்வர் பினராயி விஜயன்

சென்னை: "கூட்டாட்சி என்பது மத்திய அரசு தரும் பரிசு இல்லை, அது மாநில அரசுகளின் உரிமை" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்றுள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே, மத்திய அரசு தொகுதி மறுவரையறைக்கு அவசரம் காட்டுவது ஏன்? கடந்த முறை நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேரளாவின் மக்கள் தொகை பெருக்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் விகிதாச்சார அடிப்படையின் அர்த்தம் என்ன?

இந்தத் தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மறுக்கிறது. பிரிட்டிஷாரின் அதிகார குவிப்புக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது. மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் கலாசாரம் என்பது அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது. அதுதான் இந்தியாவின் அடித்தளம்.

கேரள அரசின் குடும்பஸ்ரீ மற்றும் தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் போன்றவை பல்வேறு மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. மையப்படுத்துதல் என்பது இத்தகைய முன்னெடுப்புகளை ஒருபோதும் அனுமதிக்காது.

தற்போதைய தொகுதி மறுவரையறை செயல்பாடு வட இந்தியாவுக்கு நன்மைபயக்கும் என்று அறிந்திருப்பதால், மத்திய அரசு இதனை முன்னெடுக்கப் பார்க்கிறது. ஒருபுறம் மக்கள் தொகையை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்களை மத்திய அரசு பாராட்டுகிறது. ஆனால் மறுபுறம் மக்கள் தொகை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி நமது பங்கினை குறைக்கிறது.

கடந்த 1976 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தான் மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆனால் கேரளா போன்ற சில மாநிலங்கள் மட்டுமே அதை சிறப்பாக செயல்படுத்தின.

இந்தக் கூட்டத்தை நடத்தியதற்காக நான் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் இந்தத் தொகுதி மறுவரையறை செயல்பாட்டை முன்னெடுக்கிறது. தொகுதி மறுவரையறை என்பது நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும். எந்த ஒரு ஆலோசனையும் நடத்தாமல் பாஜக தொகுதி மறுவரையறையை முன்னெடுக்கிறது.” என்று பேசினார்.

முன்னதாக கூடத்தில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.

மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்." என்று கூறியிருந்தார்.

மேலும் வாசிக்க>> ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x