Published : 22 Mar 2025 01:26 PM
Last Updated : 22 Mar 2025 01:26 PM

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை குறைந்தது 84 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தவறான புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத் தீமையின் அளவை குறைத்துக் காட்ட தமிழக அரசு முயல்கிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசு, சூதாட்ட நிறுவனங்களைக் காக்க முயல்வது நியாயமானது அல்ல.

தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டிலேயே ஆன்லைன் சூதாட்டம் நுழையத் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதல் தற்கொலை கடந்த 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். 2019-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டம் தீவிரமடையத் தொடங்கியது.

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது தான் ஆன்லைன் சூதாட்டம் உச்சத்தை அடைந்தது. பா.ம.க.வின் வலியுறுத்தலை ஏற்று அந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதுவரை 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் சுமார் 10 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த சட்டத்தை ஆளுனர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது. அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும்.

ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து பல குடும்பங்கள் வீதிக்கு வருவதைத் தடுப்பதும், தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதும் தான் அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமையை செய்ய தமிழக அரசு தவறி விட்டது.

இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x