Published : 22 Mar 2025 01:16 PM
Last Updated : 22 Mar 2025 01:16 PM
சென்னை: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை தொடங்கி முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பேபி அணையைப் பலப்படுத்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது. 2024 அக். 1-ம் தேதி இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் முதல் ஆய்வு இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை முதல் நடந்து வருகிறது. ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் தமிழக நீர்வளத் துறைச் செயலர் மங்கத்ராம்சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் முல்லை பெரியாறு அணை, பிரதான அணை , பேபி அணை, சுரங்க பகுதி, நீர்வழிப்போக்கிகள், மதகுகள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் பின்னர், தொடர்ந்து, இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முல்லை பெரியாறு அணையின் பலம், பராமரிப்பு குறித்தும் விவாதிக்க உள்ளனர். அதையடுத்து, ஆய்வு தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment