Published : 22 Mar 2025 08:53 AM
Last Updated : 22 Mar 2025 08:53 AM
தமிழக பட்ஜெட்டை பிரேமலதா புகழ்ந்து தள்ளியது... பிரேமலதாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் போனில் அழைத்து வாழ்த்துச் சொன்னது - இதெல்லாம் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வியெழுந்துள்ளது. ‘மாற்றி மாற்றி கூட்டணி பேரம் பேசும் கட்சி’ எனும் விமர்சனத்தை உடைக்க, பாஜக விரித்த தூண்டில்களில் சிக்காமல், தொடர்ந்து அதிமுக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தார் பிரேமலதா.
2026-ல் அதிமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளில் வெல்லவேண்டும் என்ற கணக்கு அவரிடம் இருந்தது. “அதிமுக ஆட்சியமைத்தால் அண்ணியாருக்கு துணை முதல்வர் பதவி” எனவும் சொல்லிவந்தார்கள் தேமுதிக-வினர். இது எல்லாவற்றையும் குழப்பி அடித்திருக்கிறது ராஜ்யசபா தேர்தல்.
அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் கொடுக்கும் என்று பெருத்த நம்பிக்கையில் இருந்தார் பிரேமலதா. ஆனால், “நாங்கள் அப்படி எதுவும் ஒப்பந்தம் போடவில்லையே” என தடாலடியாக கைவிரித்தார் இபிஎஸ். இதுதான் இப்போது பிரேமலதாவை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என அழுத்திச் சொன்ன அதிமுக, அன்புமணியின் ராஜ்யசபா சீட்டுக்காக அணுகிய பாமக-வுக்கு பாசிட்டிவான பதிலைச் சொல்லி இருப்பதாக தெரிகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுக-வை கழட்டிவிட்டு பாஜக கூட்டணிக்கு போன பாமக-விடம் பரிவாகப் பேசுகிறார்கள். தோள்கொடுத்து நின்ற எங்களை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று குமுறுகிறது தேமுதிக முகாம்.
இதைப் புரிந்து கொண்டே திமுக-வை மெல்லத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் பிரேமலதா. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், தமிழக பட்ஜெட் என அடுத்தடுத்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் பிரேமலதா. இதுதான் சமயமென, முதல்வர் ஸ்டாலினும், பிரேமலதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
அதிமுக தரப்பில் பாஜக, பாமக, தவெக, நாதக என பல கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் நாமும் கொஞ்சம் அரசியல் செய்தால்தான் கவுரவமான தொகுதிகளை பெறலாம் என்று நினைக்கிறார் பிரேமலதா. அதற்கேற்ப திமுக-வும் தேமுதிக விஷயத்தில் கொஞ்சம் இறங்கிவந்துள்ளது.
வடக்கிலும் தென் மாவட்டங்களிலும் தேமுதிக-வுக்கு வாக்குவங்கி உள்ளது. வட மாவட்டங்களில் பாமக-வையும், தென் மாவட்டங்களில் பாஜக-வையும் சமாளிக்க தேமுதிக உதவும் என யோசிக்கிறது திமுக. அதிமுக தர சம்மதிக்காத ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்க முன்வந்தால் கண்ணை மூடிக்கொண்டு அறிவாலயத்துக்கு புறப்பட்டு விடுவார் பிரேமலதா.
தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரேமலதா, விஜயபிரபாகரன் உதவுவார்கள். பரவலாக தமிழகம் முழுதும் வாக்குவங்கி உள்ள கட்சி தேமுதிக. எனவே, கூட்டணியை பலப்படுத்த தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக இரண்டுமே முயற்சிக்கும். ஆனால், கடந்த காலங்களில் இரண்டு பக்கமும் மாறி மாறி கூட்டணி பேசி பெரும் விமர்சனத்துக்குள்ளானது தேமுதிக. இதையெல்லாம் மனதில் வைத்து சாணக்கியத்தனமாக பிரேமலதா காய்நகர்த்த வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தேமுதிக-வின் தற்போதைய நிலை குறித்து பேசும் தேமுதிக நிர்வாகிகளோ, “இப்போது மாவட்டம்தோறும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் உள்ளோம். தேமுதிக தேர்தல் அறிக்கையில் இருந்த பல திட்டங்களை அறிவித்ததால் பட்ஜெட்டை ஆதரித்தோம்.
இதில் வேறெந்த அரசியலும் இல்லை. மாண்பின் அடிப்படையில் முதல்வர் பிரேமலதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார். 2026 மார்ச்சில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக பிரேமலதா சொல்லியுள்ளார். ராஜ்யசபா சீட் குறித்தும் அவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்கிறார்கள்.
ஆயிரம் சொன்னாலும், நீங்கள் இல்லை என்றால் எங்களுக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது என்பதை அதிமுக தலைமைக்கு மறைமுகமாக உணர்த்தவே பிரேமலதா திடீரென திமுக அரசைப் பாராட்ட ஆரம்பித்திருப்பது போல் தெரிகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment