Published : 22 Mar 2025 05:25 AM
Last Updated : 22 Mar 2025 05:25 AM
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று, 2024-25-ம் நிதியாண்டின் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணை மதிப்பீடுகள் ரூ.19,287.44 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வகை செய்கிறது. இதில், ரூ.12,639.36 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.6429.20 கோடி மூலதனக் கணக்கிலும், ரூ.218.88 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.
கடந்தாண்டு டிச.9-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின், புதுப்பணிகள், மற்றும் புது துணைப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.
இத்துணை மதிப்பீடுகளில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதி நிலைத்தன்மையை உயர்த்தவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், பங்கு மூலதன உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் கீழ் பேருந்துகள் வாங்குவதற்காக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறையின்கீழ், கடந்த 2024-ம் ஆண்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பெய்த கனமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளின் துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment