Published : 22 Mar 2025 12:13 AM
Last Updated : 22 Mar 2025 12:13 AM

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்; அதிமுக மீது திமுக கரிசனம் காட்ட வேண்டாம்: இபிஎஸ்

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: எம்.வேதன்

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். அதிமுக மீது திமுக கரிசனம் காட்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: சட்டப்பேரவையில் பட்ஜெட் பதில் உரையில் நிதி அமைச்சரின் வார்த்தை ஜாலம் இருந்ததே தவிர, செயல்பாடுகள் எதுவும் இல்லை. தமிழகத்தில் வரும் 2025-26-ம் ஆண்டில் பெட்ரோல், மது விற்பனை மூலமாக ரூ.1.63 லட்சம் கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கும். இது கடந்த 2020-21-ல் கிடைத்ததைவிட ரூ.81,431 கோடி அதிகம். அதேபோல, ஜிஎஸ்டி, பத்திர பதிவு, கலால் வரி, வாகன வரி என மாநில அரசு வரி வருவாய் மூலம் 2020-21-ம் ஆண்டைவிட 2025-26-ல் கூடுதலாக ரூ.1.01 லட்சம் கோடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மத்திய அரசின் வரி பகிர்வு ரூ.33 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைக்கும்.

இதையெல்லாம் இணைத்து பார்க்கும்போது, அரசுக்கு ரூ.1.34 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் கடனாக ரூ.1.05 லட்சம் கோடி வாங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக அரசிடம் ரூ.2.39 லட்சம் கோடி உள்ளது. இதில் மூலதன செலவாக ரூ.57 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை கழித்தால் ரூ.1.82 லட்சம் கோடி. இதில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும். எஞ்சிய ரூ.1.68 லட்சம் கோடிக்கு வருவாய் வரவு உள்ளது.

இதில் என்னென்ன புதிய திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர் என்று பார்த்தால் எதுவும் இல்லை. இதையெல்லாம் மறைத்து, ஏதேதோ புள்ளிவிவரங்களை காட்டி மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் 10 ஆயிரம் சிறு, குறு தொழிகள் மூடப்பட்டுள்ளன. பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மின்கட்டண உயர்வால், தமிழகத்துக்கு வரவேண்டிய சிறு, குறு தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன.

நிதி அமைச்சர் தனது உரையில் அதிமுகவின் கூட்டல், கழித்தல் கணக்கு பற்றி பேசினார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர் பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்தட்டும்.

அதிமுகவில் ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, கட்சி அலுவலகம் தாக்கப்படும் என காவல் துறையில் புகார் அளித்தும், குண்டர்களால் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆனால், திமுகவில் உள்கட்சி விரிசல் வந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடுநிலையாக செயல்பட்டு அறிவாலயத்தை பாதுகாத்தார். இதுதான் அதிமுக - திமுக இடையே உள்ள வித்தியாசம். எனவே, எங்கள் மீது திமுக கரிசனம் காட்ட வேண்டாம். திமுகவின் வார்த்தை ஜாலங்களில் மயங்கும் கட்சி அதிமுக அல்ல. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது.

அதிமுகவை பொருத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் வரும்போது வாக்குகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்படுவது கூட்டணி. அது ஒவ்வொரு முறையும் மாறும். ஆனால், கொள்கை நிரந்தரமானது.

திமுக அப்படி இல்லை. அறிவாலயத்தின் மேல் மாடியில் சிபிஐ விசாரணை நடக்கும்போது, கீழ் மாடியில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. எமர்ஜென்சியில் யாரால் கடுமையாக பாதிக்கப்பட்டார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். இதுபோன்ற நிலை அதிமுகவுக்கு ஒருபோதும் வராது.

அதிமுக விழித்துக் கொண்டது. விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார். திமுகவை அகற்றுவதே அதிமுகவின் நிலைப்பாடு. அதுவே எங்கள் கொள்கை. வேறு யாரும் எங்களுக்கு எதிரிகள் இல்லை. 2026 தேர்தலில் மக்கள் துணையோடு திமுக அரசு அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x