Published : 22 Mar 2025 12:03 AM
Last Updated : 22 Mar 2025 12:03 AM

உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டங்களை ஆண்டுதோறும் நடத்த அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூச மற்றும் சித்திரை தேர் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து கோயில்கள் பாதுகாப்பு இயக்க கோவை மாவட்டப் பொதுச் செயலாளர் முத்துகணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் புகழ்பெற்றதாகும். 1998-ல் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தைப்பூசம் மற்றும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வுகள் விமரிசையாக நடத்தப்பட்டன. ஆனால் கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு தேரோட்ட நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடத்த முற்பட்டபோது நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 28 ஆண்டுகளாக தடைபட்டுள்ள தேரோட்டத்தை இனி வழக்கம்போல நடத்துமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் முகமது ஷபீக் அமர்வில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், ‘‘கடந்த 10-ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்ட இந்தக் கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசத் தேர்த் திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, சித்திரைத் தேர்த் திருவிழாவையும் நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு ப்ளீடர் என்ஆர்ஆர்.அருண் நடராஜன், "கரோனா, திருப்பணி உள்ளிட்ட காரணங்களால் 2021 முதல் 2024 வரை தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த பிப். 11-ம் தேதி தைப்பூசத் தேர்த் திருவிழா நடத்தப்பட்டதைப்போல, வரும் மே 10-ம் தேதி சித்திரை தேர்த் திருவிழாவும் நடத்தப்படும்" என்றார். காவல் துறை தரப்பில் "உக்கடம் பகுதி பதட்டம் நிறைந்த பகுதி என்றாலும், சித்திரைத் தேரோட்டம் நடத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், "சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூசம் மற்றும் சித்திரைத் தேர்த் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் எந்த இடையூறும் இல்லாமல் நடத்த வேண்டும்" என அறநிலையத் துறைக்கும், போலீஸாருக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x