Published : 21 Mar 2025 06:32 PM
Last Updated : 21 Mar 2025 06:32 PM

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை - சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மாமன்றத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியபோது, மொத்தம் உள்ள 196 கவுன்சிலர்களில் 87 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதனால் மாமன்ற கூடம் காலியாக காட்சியளித்தது. அதன் பின்னர் நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். இறுதியாக மொத்தம் 180 கவுன்சிலர்கள் வந்தனர். இக்கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர்.

தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டிருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த மேயர் ஆர்.பிரியா, “ஆண்டுதோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தினால் நிதி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ரூ.350 கோடி வழங்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும்” என்றார். இறுதியில் மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வார்டு உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு தொகை ரூ.10 லட்சம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மேயர் அறிவித்தார். மாநகராட்சிக்கு சொந்தமான 65 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தொடங்க மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவரின் பெயரை சென்னை மாநகர சாலை ஒன்றுக்கு வைக்க மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட, அரசின் அனுமதி பெற்ற பின்னர், மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x