Published : 21 Mar 2025 04:12 PM
Last Updated : 21 Mar 2025 04:12 PM
சென்னை: “ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட மொத்தம் 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது, பேராவூரணி எம்.எல்.ஏ., என்.அசோக்குமார் பேசும்போது, “சேதுபாவாசமுத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சியில் உள்ள முழுநேர நியாய விலைக் கடைக்கு கட்டிடம் கட்டப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளிக்கையில், “தமிழகத்தில் மொத்தம் 34,908 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 6,611 வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன. 2,545 கடைகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளுக்கும் விரைவில் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். 2,500 கடைகளைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற ரேஷன் கடையில் 800 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருந்தால் அந்த கடை பிரிக்கப்படும். கிராமங்களில் உள்ள கடையாக இருந்தால் 500 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும், மலைப்பகுதியாக இருந்தால் 400 குடும்ப அட்டைகளுக்கு மேலாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரேஷன் கடைகள் குறித்து 97,535 புகார்கள்: காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செ.ராஜேஷ்குமார் பேசுகையில், “தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளிக்கையில், “தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் காடுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 51,327 ஏற்கப்பட்டுள்ளன. 37,299 முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது.
புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர், உணவுத் துறை செயலர், ஆணையர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை தொடர்பான புகார் தெரிவிப்பதற்காக மாதந்தோறும் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட மொத்தம் 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment