Published : 21 Mar 2025 03:46 PM
Last Updated : 21 Mar 2025 03:46 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசுகையில், “தமிகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வெறிநாய்க் கடிக்கு மருந்து உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசுகையில், “கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு, வெறிநாய்க் கடிக்கு மருந்துகள் இல்லாமல் இருந்தது. கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பாம்பு மற்றும் வெறிநாய்க்கடி பாதிப்பு இருப்பதால் அங்கெல்லாம் அவற்றுக்கான மருந்துகளை இருப்பு வைக்க முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சென்னையில் இருந்தபடியே கண்காணிக்கப்படுகிறது. மருத்துவத் துறை வலுவான கட்டமைப்பை உறுதி செய்திருப்பதுடன் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
புழக்கத்தில் 3,300 பேருந்துகள்: ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் 3,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...